Wednesday, January 15, 2014

வடைமாலை வழிபாடுதானியங்களில் உளுந்து உடலுக்கு வேண்டிய ஊட்ட சக்தியை அளிப்பதாகும். அவருடைய தாயார் அஞ்சனாதேவி அனுமனுக்கு வடை செய்து கொடுப்பாராம். அதனால் அவர் ஆரோக்யமாய் இருந்தார். அதனால் நம்முடைய பல இன்னல்கள் நோய்கள் நீங்கி வாழ அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து வணங்கலாம்.
ஆன்மீகத்தில் நாட்டம் உடையோர், தெய்வீக நம்பிக்கை உடையோர் அனைவரும் தமது காரியம் வெற்றிபெற கடவுளுக்கு தம்மால் முடிந்த காணிக்கை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். அது போலத்தான் மேற்படி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது என்பதும்.

ஜோதிடத்தில் சுபவேளையில் செய்வதற்கு சுபஹோரை, சுபநட்சத்திரம், சுபதாரை என்று உள்ளது.சுபதாரை என்பது 9 வகையாக பிரிக்கப்படுகிறது.

1.ஜன்மம். 2.ஸம்பத்து. 3.விபத்து. 4.ஷேமம். 5.பிரித்தியரம். 6.ஸாதகம். 7.வதம். 8.மைத்ரம். 9.பரமைத்ரம். இவற்றை ஜோதிடர்கள் பெரும்பாலும் திருமணவிஷயத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.இவற்றை எல்லாசமயங்களிலும் பயன்படுத்தி வெற்றிபெறலாம். 

எப்படி? இதோ அதற்கு உதாரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு.

ஆஞ்சனேயர்--மூலம் நட்சத்திரம். இதற்கு ஸாதகமான 6வது நட்சத்திரம் சதயம்.

சதயம் :
மிருகம் - பெண்குதிரை
பட்ஷி - காகம்
விருட்ஷம் - கடம்பு
அதிதேவதை - யமன்.

மேலும் சதயம் கொத்துக்கொத்தாக காய்க்கும் அனத்துக்கும் பொருந்தும்.

சதயம் நட்சத்திரம் ராகுவின் அம்சம் ராகு உளுந்துக்கு அதிபதி. சதயம் செக்குவையும் குறிக்கும். எண்ணை செக்கில் இருந்து எடுக்கப்படுகிறது.

மேற்காணும் விஷயங்களை சேர்த்துப்பார்த்தால் உண்மை புரியும்.

உளுந்தில் இருந்து மாவு எடுத்து எண்ணையில் போட்டால் வடை. 

வடையைமாலையாக தனக்கு பிடித்த எண்ணிக்கையில் ஆஞ்சனேயருக்கு சார்த்தி வழிபட்டால் தனது பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

சதயம் நட்சத்திர அதிதேவதை யமன் மரணபயம் நீங்கவும், தீர்க்காயுள் பெறவும், தங்கள் வேண்டுதல் நிறைவேறவும்,சாதகமாக அமைய 6 வது
தாரையை பயன்படுத்தினால் வெற்றிநிச்சயம்.

வாலில் சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும் வைத்து வழிபடுவது, குரங்குகளின் இனத்திற்கே தங்கள் வால் பகுதியின் மீது மிகுந்த பற்று உண்டு. அனுமனுக்கும் வாலில் வலிமை அதிகம் உண்டு. இதற்கான ஒரு வரலாற்றைக் காணலாம்.

பீமசேனன் திரௌபதியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்து சௌகந்திகா மலரைத் தேடிக் காட்டில் அலைந்தபோது வழியில் ஒரு கிழக்குரங்கு பாதையை மறைத்தவாறு வாலை நீட்டிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்ல விரும்பாமல் குரங்கிடம் வாலை சற்று நகர்த்திக் கொள்ளச் சொன்னபோது குரங்கு “நான் மிகவும் தள்ளாடிய நிலையில் படுத்திருக்கின்றேன் நீயே வாலை நகர்த்திவிட்டுச் செல்லலாம்” என்று கூறியது. (படுத்திருந்த குரங்கு ஆஞ்சனேய மூர்த்தி தான். அவருக்கு வந்துள்ளது தனது சகோதரன் பீமன் என்பதும் தெரியும். இருந்தபோதிலும் ஒரு சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கிடந்தார்.) பீமனால் வாலைத் துளிகூட நகர்த்த முடியவில்லை. இருந்தாலும் வீராப்பாகப் பேசி தான் இராமபக்தனான அனுமனின் சகோதரன் என்றும் தன்னால் முடியும் என்றும் பேசி வாதிட அனுமனும் மகிழ்ந்து தன்னுடைய சுயரூபத்தை அவனுக்குக் காட்டி அருள் புரிந்தார். அப்போது அனுமன், தங்கள் வாலின் மகிமையே பெரிதாயிருக்க மற்ற பெருமைகளை எப்படி புகழ்வது என்று அவரை வணங்கி அருள் பெற்றான். இந்த வரலாற்றைப் பின்பற்றியே வாலில் பொட்டு வைத்து பூஜிக்கும் வழிபாடு ஆரம்பித்ததாகக் கூறுவர்.
ஸ்ரீராம சேவைக்காக லங்கைக்குச் சென்ற அனுமான், தியாக மனப்பான்மையுடன், குரங்குகளுக்கே பிரியமான, தனது வாலுக்கு தீவைத்ததையும் மகிழ்ச்சியுடன் ஏற்று தனது வாலின் மகிமையை நிரூபணம் செய்தார். இதுவும் அவரது வாலில் காரியசித்திக்காக பொட்டு வைத்து பூஜிப்பதை அர்த்தமுள்ளதாக்குகிறது.

செந்தூரக் காப்பு வழிபாடு துளசிமாலை வழிபாடு:-

துளசி இலை மருத்துவ சக்தி வாய்ந்தது. நோய்களைத் தீர்க்கும் குணமுடையது. எனவே துளசிமாலைகளை அனுமனுக்கு அணிவித்தால் நாமும் சகல நோய்களிலிருந்து விடுபடலாம்.

அனுமனின் வால் வழிபாட்டின் விசேஷங்கள்:-

இராமனுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமென சிவபெருமான் ஆசைப்பட்டு ஆஞ்சனேயர் உருவம் எடுத்தார். திருமாலின் சிறந்த பக்தர்களில் ஒருவர் சிவபிரான். அது போன்று சிவபிரானின் பக்தர்களில் திருமால் முக்கியமானவர். சிவபெருமான் ஆஞ்சனேயர் வடிவெடுத்தவுடன் பார்வதி தேவியும் தானும் இக்கைங்கர்யத்தில் ஈடுபட விரும்பிய போது வாலினுள் ஐக்கியமானாள். அதனால் தான் அனுமன் வாலில் சக்தி அம்சம் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே அனுமனின் வால் வழிபாடு பார்வதியை வணங்குவதற்கு ஒப்பானது. அனுமனின் வாலில் மணிகட்டி வேண்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

மேலும் அனுமனின் வாலில் நவகிரஹங்களும் ஐக்கியமாகியுள்ளதாகவும் கூறுவர். அதனால் வால் வழிபாடு கிரஹ பீடைகளையும் அழிக்கும்.

முக்கியமாக ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அனுக்ரஹம்:-

அனுமானின் வாலை பூஜிப்பவர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்கிரகம் கிட்டுகிறது என பார்ப்போம், ஸ்ரீஇராமருக்கான சேது பந்தனம் துரிததியில் நடந்து கொண்டிருக்கையில் அனுமனை ஸ்ரீசனீஸ்வர பகவான் அணுகி தான் அவரை உடனடியாக ஏழரை வருடங்கள் பீடிக்கப்போவதாகக் கூறினார். ஸ்ரீராமரது சேவை முடிந்ததும் தானே வருவதாக அனுமன் கூறியும் அவர் தாமதிக்கத் தயாராக இல்லை. வேறு வழியின்றி "சரி, உங்களுக்கு எங்கே சௌகரியமோ அங்கு ஏறி அமருங்கள்” என அனுமான் கூற, அவரும் அவரது தலைமீது ஏறி அமர்ந்தார். அதுவரை பெரும் பாறைகளையே தூக்கிய அனுமான், பெரும் மலைகளையும் குன்றுகளையும் தூக்கித் தலைமீது அழுத்தி வைத்துச் சுமக்கத் தொடங்கினார். கல்லடி பட்டு நொந்த ஸ்ரீசனீஸ்வரர் அவரிடம் தன்னைவிட்டு விடுமாறு விடாது கெஞ்சி ‘ஹனுமான் சாலீசா’ எனும் நாற்பது ஸ்லோகங்களைப் பாடவும், கருணையுடன் தன் பக்தர்களை அவர் பீடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், தான் போய் விழும் ஊரில் திருடுபவர்களையும், தனது பக்தர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களையும் மட்டும் அவர் பீடிக்கலாம் எனும் சலுகையுடனும் அவரை ஒரு பெரிய பாறையில் வாலினால் சுழற்றி (மஹாராஷ்டிரத்தில் பூனேக்கு அருகில் உள்ள) ‘சனி சிக்னபூர்’ எனும் ஊரில் போய் விழுமாறு செய்தார். இதுவும் அவரது வாலுக்கு பூஜை செய்ய ஒரு காரணமாக அமைந்தது.

ஜெய் ஸ்ரீராம்:-

அனுமனின் திருவுருவங்கள் பலவிதம். பக்த ஹனுமான், வீர ஹனுமான், சஞ்சீவி ஹனுமான், விநய ஹனுமான், பஞ்சமுக ஹனுமான் என்று பல வடிவங்கள். அவற்றை வணங்கி ஆற்றல்மிக்கவரான அனுமனின் அருளை அனைவரும் பெற்றிடுவோமாக!

No comments: