1.1 இந்திரலிங்கம்
அஷ்டலிங்க தரிசனத்தில் முதலில் அருள்தருவது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட பலன் கிடைக்கும். இங்கு வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகும்.
1.2 அக்னிலிங்கம்
கிரிவல பாதையில் உள்ள அக்னி குளத்தையொட்டி அமைந்துள்ளது அக்னிலிங்கம். தென்கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். ருத்ரமூர்த்திகள் மூவர் பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரிவலம் வந்தனர். அவர்கள் திருமேனிகள் இந்த இடத்தில் வந்தபோது குளிர்ச்சிபெற்றது. அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்பு லிங்கம் காட்சியளித்தது. அந்த இடம்தான் இன்றளவும் அக்னி லிங்கமாக காட்சி தருகிறது. இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை, மனபயம் நீங்கும்.
1.3 எமலிங்கம்
கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு தெரிவிக்கிறது. இங்கு மனமுருகி பிரார்த்தனை செய்தால், பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும்.
1.4 நிருதிலிங்கம்
சோண தீர்த்தத்துக்கு அருகே நிருதி லிங்கம் அமைந்துள்ளது. ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு கிடைக்கும்.
1.5 வருணலிங்கம்:
நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது கிரிவல பாதையின் ஒரு இடத்தில் வானம்தொடும் அளவுக்கு நீரூற்று வளர்ந்தது. அந்த புனிதநீரை உடல் முழுவதும் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார். வழி திறந்தபோது எதிரில் ஒளிமயமான வடிவில் லிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கமே வருணலிங்கம். இங்குவழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
1.6-வாயுலிங்கம்
மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். இக்கோயிலை அடையும்போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். இங்கு வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு நல்வழி கிடைக்கும். கண் திருஷ்டி தொல்லைகள் நீங்கும்.
1.7 குபேரலிங்கம்:
எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேரலிங்கம். இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மன அமைதி கிடைக்கும்.
1.8 ஈசான்யலிங்கம்:
நாமெல்லாம் சவம். அவன் ஒருவனே சிவம். உடலெல்லாம் சாம்பல் பூசி மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணர்த்தும் லிங்கமே ஈசான்யலிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. கிரிவல பாதையின் கடைசி லிங்கம் இது. இங்கு வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும்.
2 திருவண்ணாமலையில் அஷ்ட லிங்க தரிசன பலன்கள்
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஷ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இந்த எட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும். கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.
அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.
இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது. கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
ARUNACHALAM - THE HOLY HILL
No comments:
Post a Comment